டிரம்பை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான கண்டனத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியதை அடுத்து, அந்நாட்டின் வரலாற்றில் இரண்டு முறை கண்டனத் தீர்மானத்திற்கு ஆளான அதிபர் என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளார்.
அடுத்து செனட் சபைக்கு அனுப்பப்பட உள்ள தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே டிரம்பின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டாலும், எதிர்காலத்தில் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடாத வண்ணம் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, ஜோ பைடன் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உக்ரைன் அதிபரை நிர்ப்பந்தித்ததாக, 2019ஆம் ஆண்டில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவையான பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் செனட் சபையில் தோல்வியடைந்ததால் டிரம்பின் பதவி தப்பியது.
இந்நிலையில், நாடாளுமன்ற வன்முறையை தூண்டி குற்றச்சாட்டில், அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்காக பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஜனநாயகக் கட்சியினரும், டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்த 10 எம்.பி.க்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர்.
முன்னர் ஆண்ட்ரூ ஜான்சன், பில் கிளின்டன், டிரம்ப் ஆகியோர் மீதான கண்டனத் தீர்மானங்கள், மாதக்கணக்கில் ஆய்வு, விசாரணைக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டன. ஆனால் தற்போது ஒரே வாரத்தில் பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இதன் பிறகு, சபாநாயகர் நான்சி பெலோசியால், செனட் சபைக்கு தீர்மானம் அனுப்பப்படும். இந்த தீர்மானத்தின் மீதான விசாரணைக்காக செனட் சபையை அவசரமாகக் கூட்டும் திட்டம் இல்லை என குடியரசுக் கட்சியை சேர்ந்த, பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கன்னல் கூறியுள்ளார். எனவே, டிரம்பின் அதிபர் பதவிக் காலம் முடிவடைந்த பிறகே, செனட் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
அதிபர் பதவியை பறிப்பதற்கான காலங்கடந்த நடவடிக்கை என்றபோதிலும், கண்டனத் தீர்மானம் மூன்றில் இருபங்கு உறுப்பினர் ஆதரவுடன் நிறைவேறிவிட்டால், அதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் அதிபர் பதவிக்கு டிரம்ப் போட்டியிடுவதைத் தடை செய்யும் தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட முடியும்.
இதனிடையே, செனட் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் டிரம்ப் மீதான கண்டனத் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். எனவே மிட்ச் மெக்கன்னல் உடனடியாக செனட் சபையை கூட்டுவாரா, தங்களது கட்சியை சேர்ந்த டிரம்புக்கு எதிராக வாக்களிப்பாரா என்ற கேள்விகள் அமெரிக்க அரசியலில் எழுந்துள்ளன.