இரண்டு வருடத்திற்குள் இஸ்ரேல் நான்காவது முறையாக தேர்தலை சந்திக்கவுள்ளது இந்த தேர்தல் வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
பட்ஜெட்டை கால அவகாசத்திற்குள் தாக்கல் செய்ய இயலாத காரணத்தால் இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
ஏப்ரல் 2019 மற்றும் செப்டம்பர்-2019 இஸ்ரேலில் தேர்தல் நடைபெற்றது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லிகுட் கட்சிக்கும் பாதுகாப்பு அமைச்சராக செயல்பட்ட பென்னி காண்ட்ஸ் ப்ளூ அண்ட் வைட் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. ஆனால் இரண்டு தேர்தலிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை இதனால் பிரதமர் யார் என்பதில் குழப்பம் நிலவி வந்தது.
இதன் தொடர்ச்சியாக மார்ச் 2020 மீண்டும் ஒரு தேர்தல் நடைபெற்றது. அதன் பின் ஏப்ரலில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைத்தனர்.
சுழற்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பென்னி காண்ட்ஸ் பிரதமராக பணியாற்றுவார்கள் என தீர்மானம் எட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் முதல் 18 மாதங்கள் நெதன்யாகு பிரதமராக பணியாற்றுவார். பின் நவம்பர் 2021 முதல் காண்ட்ஸ் பிரதமராக பணியாற்றுவார்
வரவிருக்கும் தேர்தலில் நெத்தன்யாகுவுக்கு பல சவால்கள் உள்ளன. பிபி என்று அழைக்கப்படும் நெத்தன்யாகு ஐந்தாவது முறையாக பிரதமர் பதவி வகிக்கிறார். இஸ்ரேல் நாட்டில் நீண்ட காலமாக பிரதமராக இருந்தவரும் இவர்தான்.
நெத்தன்யாகு மீது பல தரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. நெத்தன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா , இஸ்ரேல் தொழில் அதிபர்களிடம் அமெரிக்க டாலர் ஒரு லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் மற்றும் ஷாம்பெயின் பரிசாக பெற்றுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நெத்தன்யாகு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊடகங்களுக்கு உதவியதாகவும் அதற்கு ஈடாக ஊடகங்கள் அவருக்கு சாதகமாக செயல்பட்டன என்றும் குற்றம் அவர் மீது உள்ளது.
இதனை நெத்தன்யாகு தொடர்ந்து மறுத்து வருகிறார் .இந்த வழக்கு வருகிற பிப்ரவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது
நெதன்யாகுவுக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்துள்ளன .ஊழல் மட்டுமின்றி அவர் கொரோனா கையாண்ட விதம் குறித்தும் போராட்டக்காரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்
பாலஸ்தீன பிரச்சினையால் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்ந்து பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தத்தை அறிவித்தார்.
அதன் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேலுடன் நட்புறவை உருவாக்கிக் கொள்ளும் என்ற உடன்பாடு எட்டப்பட்டது
ஏஜிப்ட், ஜோர்டான் தொடர்ந்து இஸ்ரேலை அங்கீகரித்த மூன்றாவது அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகம் .அரபு நாடுகள் வரலாற்றில் முக்கியமான ஒப்பந்தமாக கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் இஸ்ரேல் - பஹ்ரைன் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்.
30 நாட்களில் இரண்டு அரபு நாடுகள் இஸ்ரேலுடன் செய்த ஒப்பந்தம் இஸ்ரேல் வெளியுறவுக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து டிரம்ப்பை பாராட்டினார் நெத்தன்யாகு. மேலும் அதற்காக டிரம்ப் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
வரும் ஜனவரி 20 டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகும் சூழ்நிலையில் நெத்தன்யாகு தேர்தலில் புதிய சிக்கல்களை சந்திக்கலாம் என கருதப்படுகிறது
இதற்கிடையில் நெதன்யாகுவின் லிக்குட் கட்சியிலிருந்து விலகி நியூ ஹோப் என்ற கட்சியை முன்னாள் லிக்யூட் கட்சியின் எம்பி கிடியோன் சார் தொடங்கியுள்ளார். இதனால் ஓட்டுக்கள் பிரியும் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சவால்களை தாண்டி 6வது முறையாக பிரதமர் அரியாசனத்தில் நெத்தன்யாகு அமர்வரா என்பதை தேர்தல் முடிவுகள் தான் உறுதி செய்யும்.