ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மிருகக் காட்சி சாலையில் பாண்டா கரடி ஒன்று பனி மனிதனுடன் சண்டையிடும் க்யூட் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டின் இயல்புக்கேற்ப கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் மக்கள் சோர்ந்து போயிருந்தனர். தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் மக்களுக்கு அதனை செலுத்த பாதிக்கப்பட்ட நாடுகள் தயாராகி வருகின்றன. இதனால் நம்பிக்கை பெற்றுள்ள மக்கள் புத்துணர்ச்சியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
பனி சூழ்ந்த ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் மிகப்பெரிய மிருகக் காட்சி சாலை அமைந்துள்ளது. இந்த மிருகக் காட்சி சாலையில் பனிக்கரடிகள் அதிகளவில் பரமாரிக்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இங்கு வரும் பார்வையாளர்களைக் கவர மிருகக் காட்சி சாலை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்தது.
அங்கு ரூ யி (Ru Yi) என்ற பெயர் கொண்ட பாண்டா கரடி பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் பனி மனித சிலையை தயார் செய்தனர். மேலும் அப்பனி மனித சிலைக்குள் கேரட் மற்றும் மூங்கில் இலைகளை வைத்தனர். பசியுடன் அங்கு வந்த பாண்டா கரடி அந்த பனி மனிதனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடத் தொடங்கியது. அதனுடன் உருண்டும் புரண்டும் கடித்தும் சண்டை போட்டது. மேலும் அதில் இருந்த கேரட், மூங்கில் இலைகளையும் பிடுங்கி தின்றது. உண்மையில் இந்த காட்சி அழகான பாண்டா கரடி, பனி மனிதனுடன் சண்டையிடுவது போன்று தத்ரூபமாக இருந்தது. பார்வையாளர்கள் இதைக் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இந்த காட்சி வீடியோவாக வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பனிமனிதனுடன் சண்டையிட்ட பாண்டா கரடி ரூ யி மற்றும் அதன் தோழி டிங் டிங் கரடியை கடந்தாண்டு மாஸ்கோவிற்கு வந்த சீன அதிபர் ஜிங்பிங், ரஷ்ய அதிபர் புதினுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் ரஷ்யாவின் கூட்டு ஆராய்ச்சி திட்டத்திற்காக பாண்டா கரடிகளை 15 ஆண்டுகள் வழங்கியுள்ளது.