சீனாவில் இருந்து நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் அங்கு எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமிக்கு திரும்பி வருகிறது.
நிலவில் இருந்து கற்கள், பாறைகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சீனாவில் இருந்து கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு விண்கலம் அனுப்பப்பட்டது.
‘சாங்கி-5’ என்ற இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்த தரையிறங்கு கலம் கடந்த 1-ந்தேதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்தது.
கடந்த 3-ந்தேதி இந்த கலம் நிலவு பரப்பில் இருந்து புறப்பட்டு, விண்கலத்துடன் கடந்த வாரம் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
இதையடுத்து சீனாவின் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கி உள்ளது. விரைவில் இந்த விண்கலம் நிலவில் எடுக்கப்பட்ட பாறைகளுடன் பூமியை வந்தடைகிறது.