நள்ளிரவில் கரைகடந்த புரெவிப் புயல் இலங்கையின் வடக்குப் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையில் திரிகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நள்ளிரவு 11.30 மணியளவில் புரெவிப் புயல் கரை கடந்தது. அப்போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் நேற்று காலை முதலே அதி கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. யாழ்ப்பாணம், முல்லைத் தீவு பகுதிகளில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
முல்லைத்தீவு, அலம்பில் போன்ற பகுதிகளில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக முல்லைத்தீவு பகுதியில் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.
புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
புயல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ்ப்பாணம், வடமராச்சி, வல்வெட்டித்துறை உள்ளிட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.