ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிய சீன மாணவியை பிரிட்டனைச் சேர்ந்த தூதரக அதிகாரி மீட்டு உயிரை காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சீனாவில் உள்ள குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஷாங்ஷான் நகரில் பியர்ல் ((pearl))ஆறு ஓடுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த நதியை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்திருந்தனர். இந்த ஆற்று பகுதியை காண வந்த சீன மாணவி ஒருவர் ஆற்றுக்குள் இறங்க முயன்றார். மாணவியின் துரதிருஷ்டவசம் அவர் கால் வைத்த பகுதியே மிக ஆழமானதாக அமைந்து விட்டது. இதனால், ஆற்றுக்குள் விழுந்த மாணவி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த காட்சியை கண்ட அங்கிருந்தவர்கள் மத்தியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனரே தவிர , நீச்சல் தெரியாததால், ஒருவருக்கும் ஆற்றுக்குள் குதித்து மாணவியை காப்பாற்றும் துணிவு வரவில்லை.
இந்த சமயத்தில் அங்கிருந்த சோங்கிங் நகர பிரிட்டன் துணை தூதரகத்தில் பணியாற்றும் 61 வயது ஸ்டீபன் எல்லிசன் இந்த காட்சியை கண்டு அதிர்ந்து போனார். ஆனாலும், சற்றும் தாமதிக்காமல் மாணவியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். தன் காலனிகளை கழற்றிய வீசியவர் அடுத்த விநாடி தண்ணீருக்குள் பாய்ந்து மாணவியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். அதற்குள், உயிர்காப்பு உபகரணங்களுக்கு ஆற்றுக்குள் வீசப்பட்டன. தொடர்ந்து, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு , மாணவி கண் விழித்து கொண்டார். தன் உயிரைக் காப்பாற்றிய பிரிட்டன் தூதரக அதிகாரிக்கு அந்த மாணவி மனதார நன்றியும் தெரிவித்து கொண்டார்.
தற்போது,ஸ்டீபன் எல்லிசன் சீன மாணவியை காப்பாற்றும் வீடியோ சீனாவில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சோங்கிங் நகர பிரிட்டன் துணை தூதரகம், ஸ்டீபன் எல்லிசன் குறித்து மிகவும் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.