விண்வெளி வரலாற்றில் முதன் முறையாக, தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்சின் விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நாசா 4 விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது.
பூமிக்கு மேல் 400 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம். அங்கு தங்கும் பன்னாட்டு விண்வெளி வீரர்கள் காற்றில்லா வெற்றிட வாழ்க்கை குறித்தும் விண்வெளி குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். வழக்கமாக நாசாவின் சூயெஸ் விண்கலம் வாயிலாக வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இப்போது., முதன்முறையாக உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டோடு இணைந்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட Crew Dragon விண்கலத்தில் 3 அமெரிக்க வீரர்களும், ஜப்பானை சேர்ந்த ஏரோநாட்டிகல் எஞ்சினியரும் சென்றுள்ளனர்.
புளோரிடாவில் உள்ள கேப் கெனவரலில் இருக்கும் நாசாவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7.27 மணிக்கு ஸ்பேஸ் எக்சின் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது…
புவிவட்ட பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம், பூமிக்கு அருகே இருக்கும் போது ராக்கெட்டை ஏவினால், விண்கலம் 8 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தைஅடைந்து விடும். ஆனால் இப்போது மோசமான காலநிலை காரணமாக திட்டமிட்ட நேரத்திற்குப் பதிலாக ஒரு நாள் கழித்தே ராக்கெட் ஏவப்பட்டது. எனவே 27 மணி நேரத்திற்குப் பிறகே சர்வதேச விண்வெளி நிலையத்துடன் அது இணையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
Crew Dragon விண்கலம் ஆட்டோமேட்டிக் இயக்கத்தில் செலுத்தப்படுகிறது. அதன் பயணத்தை ஹூஸ்டன், டெக்சாஸ் மற்றும் ஹவ்தோர்னில் உள்ள நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள். விண்கலத்தில் உள்ள வீரர்களுக்கு சிறிது நேரம் தூங்குவதற்கான வசதியும் அதனுள் உள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மே மாதம் இரு வீரர்களை அனுப்பி இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முற்றிலுமாக இந்த விண்வெளித் திட்டத்தை கையாளுவதால், இது ஒரு மைல்கல் எனவும் பார்க்கப்படுகிறது. தனது ஸ்பேஸ் ஷட்டில் திட்டத்திற்குப் பதிலாகவும், ரஷ்ய ராக்கெட்டுகளை நம்பி இருக்க வேண்டாம் என்பதற்காவும், கடந்த 2014 ல் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம் செய்து கொண்டது.
தனது ஸ்பேஸ் ஷட்டில் திட்டத்தை அமெரிக்கா ரத்து செய்த பின்னர் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக அதனால் சொந்தமாக விண்வெளி வீரர்களை அனுப்ப இயலவில்லை. அதன் பின்னர் ரஷ்யாவின் சோயஸ் விண்கலம் வாயிலாகவே நாசா வீரர்களை அனுப்பி வருகிறது.
நாசாவுக்காக மொத்தம் 6 விண்வெளிப் பயணங்களை ஏற்பாடு செய்ய ஸ்பேஸ் எக்ஸ் உடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் இது முதலாவது பயணமாகும்.ஹாலிவுட் ஹீரோ டாம் குரூஸ் உள்பட பல தனியாரை விண்வெளிக்கு கொண்டு செல்லவும் ஸ்பேஸ் எக்ஸ் பதிவு செய்துள்ளது. அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவரான ஜோ பிடன் டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், அறிவியலின் சக்திக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று என குறிப்பிட்டுள்ளார்.