ரஷ்ய நாட்டு ஹெலிகாப்டரை தெரியாமல் சுட்டு வீழ்த்தி விட்டதாக அசர்பைஜான் நாடு மன்னிப்பு கோரியுள்ளது.
நாகோர்னோ - காராபாக் எனும் மலைப்பகுதி ஒன்றைக் கட்டுப்பபாட்டில் கொண்டு வர பல ஆண்டுகளாக அசர்பைஜான் மற்றும் ஆர்மீனிய நாடுகள் போரிட்டு வருகின்றன. இந்த நிலையில் , நேற்று சண்டை நடைபெற்று வரும் நாகோர்னோ - காராபாக் பகுதியில் பறந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த எம்.ஐ 24 ரக ஹெலிகாப்டரை அசர்பைஜான் நாட்டு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தில் இரு ரஷ்ய நட்டு பைலட்டுகள் கொல்லப்பட, ஒருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், ' கடந்த 9 ஆம் தேதி மனிதர்கள் கையில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணையால் எம்.ஐ. 24 ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டு ஆர்மீனிய எல்லையில் விழுந்தது' என்று குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில்தான், அசர்பைஜான் நாடு தவறுதலாக ஹெலிகாப்டரை சுட்டு விட்டதாக கூறி ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக அசர்பைஜான் நாடு அளித்துள்ள விளக்கத்தில் சண்டை நடைபெற்று வரும் பகுதியில் இருட்டான நேரத்தில் குறைந்த உயரத்தில் ரஷ்ய ஹெலிகாப்டர் பறந்துள்ளது. ரஷ்ய விமானப்படை ஹெலிகாப்டர்கள் இதற்கு முன் இந்த பகுதியில் பறந்ததில்லை. இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றமாக சூழ்நிலையில் , ஆர்மீனிய தரப்பின் ஆத்திரமூட்டலான செயல் காரணமாக நாங்கள் எதற்கும் தயார் நிலையில் இருந்தோம். எனவேதான், ஹெலிகாப்டரை சுட முடிவு செய்தோம். இந்த துயர சம்பவத்துக்காக அஜர்பைஜான் ரஷ்யாவிடத்தில் மன்னிப்பு கோருகிறது, இது தற்செயலான நிகழ்வுதானே தவிர ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையாக கருதவேண்டாம் '' என்று கூறியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தயராக இருப்பதாகவும் அசர்பைஜான் நாடு அறிவித்துள்ளது.