அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகர வாக்கு எண்ணிக்கை மையத்தில் குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரம் ஆயிரக்கணக்கான டிரம்ப் எதிர்ப்பாளர்கள், அமெரிக்காவின் பல நகரங்களில், வாக்கு எண்ணிக்கையை விரைந்து முடிக்க கோரி சாலைகளில் பேரணியாக சென்றனர். நியூ யார்க்கில் அமைதியாக நடந்த இந்த பேரணியில் ரகளை செய்ததாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்காகோ,லாஸ் ஏஞ்சலஸ், சியாட்டில், ஹூஸ்டன், பிட்ஸ்பர்க், மின்னாபொலிஸ், சாண்டியாகோ உள்ளிட்ட நகரங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக பேரணிகள் நடந்தன. செவ்வாய் இரவு வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாஷிங்டன் டிசி முதல் சியாட்டில் வரை ஆங்காங்கே எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தாலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
தேர்தல் தொடர்பாக கலவரங்கள் ஏற்பட்டால் அதை சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக லாஸ் ஏஞ்சலஸ் போலீஸ் கூறியுள்ளது. போர்ட்லாண்டில் பரவலாக கலவர சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து ஓரிகான் ஆளுநர் கேட் பிரவுன் தேசிய பாதுகாப்பு படையை களத்தில் இறக்கி உள்ளார்.
மின்னபொலீசில் கலவரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே அதிபர் தேர்தல் முடிவுகளை பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் 165 க்கும் அதிகமான அமைப்புகள் வரும் சனிக்கிழமை வரை நாடு தழுவிய நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.