அமெரிக்காவில் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் 2 தமிழர்கள் உட்பட 5 வெளிநாடு வாழ் இந்தியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் தொழில்துறை மட்டுமின்றி அரசியலிலும், இந்திய வம்சாவளியினர் பலர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கணிசமாக உள்ள இந்திய வாக்காளர்களை கவரும் விதமாக, ஜனநாயக மற்றும் குடியரசு என இருகட்சிகள் சார்பிலும் இம்முறை இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
அந்த வகையில் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட பிரமீளா ஜெயபால், ஜனநாயகக் கட்சி சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அமெரிக்க வாழ் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவரும், கலிபோர்னியாவில் போட்டியிட்ட ரோகண்னா ஆகியோரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினரும், இந்தியருமான அமி பெரா, தொடர்ந்து 7வது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இதனிடையே ஓஹியோ மாநில செனட் சபைக்கு போட்டியிட்ட முதல் இந்திய-அமெரிக்கரான நீரஜ் ஜெ. ஆண்டனி வெற்றி பெற்றுள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிராஜ் ஒஹையோ மாநிலத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, முதல் இந்திய-அமெரிக்கர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார்.