அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 538 பிரதிநிதிகளை கொண்ட தேர்வு குழுவில், 270 பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறுபவரே அதிபராக முடியும்.
கடைசி கட்ட தகவலின் படி குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப் 213 வாக்குகள் பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் 238 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இருதரப்பிலும் போட்டி மிக கடுமையானதாகவே இருக்கிறது.
நெப்ராஸ்கா, லூசியானா, வடக்கு டகோடா, தெற்கு டகோடா, வியோமிங், இன்டியானா, அர்கான்சாஸ், கான்சாஸ், மிசோரி, இடாகோ, உடாவா, ஒகியோ, புளோரிடா, டெக்சாஸ், அய்யோவா ((IOWA)), மாண்டானா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்று உள்ளார்.
நியூ மெக்சிகோ, நியூயார்க், மாசாசூட்ஸ், கொலராடோ, டிஸ்ரிக் ஆப் கொலம்பியா, நியூ ஹாம்சையர், கலிபோர்னியா, ஓரேகான், வாஷிங்டன், வெர்ஜினியா, ஹவாய், மின்னசோட்டா ஆகிய மாகாணங்களில் ஜோ பைடனுக்கு வெற்றி கிட்டியுள்ளது.
வெற்றியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்களிக்கும் மாநிலங்களில் இன்னும் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடையவில்லை. குறிப்பாக பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் எதிர்கட்சியினர் முறைகேடு செய்வதாக குற்றம்சாட்டியுள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும், தேர்தலில் ஏற்கனவே தாம் வெற்றி பெற்று விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம் தாம் வெற்றிப் பாதையில் பயணிப்பதாக ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனைத்து வாக்குகளும் எண்ணும் வரை தேர்தல் நிறைவு பெறாது என்று அவர் கூறியுள்ளார்.
இன்னும் லட்சக்கணக்கான வாக்குகள் எண்ணப்படாமல் இருப்பதால், அமெரிக்க அதிபர் பதவியில் அமரப் போவது யார் என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகளை எண்ண வேண்டியிருப்பதால் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.