எந்தப் பக்கம் திரும்பினாலும் கட்டட இடிபாடுகள்... காணாமல் போன உறவினர்களை யாராவது காப்பாற்றிக் கொண்டுவர மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் அங்குமிங்கும் அலையும் மக்கள்... வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக சேகரித்த உடைமைகள் அனைத்தையும் நொடிப்பொழுதில் இழந்து தவிக்கிறார்கள் துருக்கி மக்கள்.
இடிந்து போன கட்டடங்களுக்கு இடையே தமது உறவினர்களைத் தேடிக் களைத்துப் போன மக்களுக்கு, 65 மணி நேரமாக உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை உயிருடன் மீட்கப் பட்டுள்ளது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது...
எலிஃப் பெரின்செக்
உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்றால் துருக்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. துருக்கி அதிபர் எர்டோகனின் செயல்பாடுகளால் பாதாளத்துக்குச் சென்ற துருக்கியின் பொருளாதாரத்தை கொரோனா நோய்த் தொற்று அதல பாதாளத்துக்குத் தள்ளியது. இதனால், துருக்கி மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்டில் மற்றொரு துயர நிகழ்வு நடந்துள்ளது.
துருக்கிக்கு மேற்கே உள்ள ஈஜியன் கடல் பகுதியில், அக்டோபர் 30 - ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கடற்கரையோரமாக இருக்கும் இஸ்மிர் நகர அடுக்குமாடிக் குடியிருப்புகள் பலவும் சீட்டுக்கட்டு போலச் சரிந்து விழுந்தன. துருக்கியில் நிலநடுக்கத்துக்குப் பின் 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் நான்குக்கும் கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் மட்டும் 23 முறை ஏற்பட்டன. இதையடுத்து சுனாமியும் ஏற்பட்டு இஸ்மிர் நகரைத் தாக்கியது... நிலநடுக்கத்தால், இதுவரை 76 க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்...
இஸ்மிர் நகர இடிபாடுகளை அகற்றி பொதுமக்களை மீட்கும் முயற்சியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இஸ்மிர் நகரில் இடிபாடுகளை அகற்றிய போது, தனது தாய் மற்றும் மூன்று உடன் பிறந்தவர்களுடன் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட எலிஃப் பெரின்செக் என்ற மூன்று வயதுக் குழந்தை மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். குழந்தையுடன் சேர்ந்து ஒரு நாயும் அருகிலிருந்த மற்றொரு அபார்மெண்ட் இடிபாட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு 36 மணி நேரம் போராடிய 70 வயது முதியவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...
இந்த நிலநடுக்கத்தால் பலரின் நிலைமை என்னவென்றே தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.