அமெரிக்க வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ கடந்த இருமாதங்களாக எரிந்து வருகிறது. இதுவரை 40 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பு நெருப்பில் சிக்கி அழிந்துபோன நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகளும், 31 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கலிபோர்னியாவின் சாண்டா அனா பாலைவனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ அருகில் உள்ள ஆரஞ்சு கவுண்டிக்கும் பரவியது.
இதனால் அப்பகுதியில் இருந்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 லட்சத்து 50 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பசிபிக் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்களும், ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் கொலராடோவில் உள்ள கிராண்டி வனப்பகுதியில் கடந்த ஒருவாரமாக எரிந்து வரும் நெருப்பை அணைக்கு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பகுதியில் இருந்து வெளியேறும் அடர்த்தியான கருப்புப் புகை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்பதுடன், மக்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.