பிரான்ஸ் நாட்டில், நபிகள் நாயகத்தின் கேலி சித்திரத்தை காட்டி வகுப்பறையில் விவாதத்தில் ஈடுபட்டதால், தலை துண்டித்து வரலாற்று ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 9 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரீஸ் புறநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த கொலை குறித்த தகவலின்பேரில் வந்த போலீசார், கத்தியுடன் திரிந்த நபரை சுட்டுக் கொன்றனர்.
அந்த நபர், ரஷ்யாவின் செசன்யா பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் என்று பிரான்ஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், அவர் தனியாக இச்செயலில் ஈடுபட்டாரா, அல்லது வேறு சிலருடன் சேர்ந்து ஈடுபட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் கொலையாளியின் உறவினர்கள் 4 பேரை உடனடியாக கைது செய்த போலீஸ், அதே பள்ளி மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட மேலும் 5 பேரையும் தற்போது கைது செய்துள்ளனர்.