வடகொரியாவை ஆட்சி செய்யும் தொழிலாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 75 - ம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, பியோங்யாங்கில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அந்த அணிவகுப்பில், இதுவரை இல்லாத வகையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் மிகப்பெரிய ஏவுகணையைக் காட்சிப்படுத்தி எதிரிகளை மிரள வைத்துள்ளது வடகொரியா. அப்போது, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ராணுவ வீரர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி கூறியதுடன், குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறியதற்கும் மன்னிப்பு கோரினார். அப்போது, கிம் ஜாங் தன் கண்ணாடியை கழற்றி விட்டு, கண்ணீர் விட்டது மக்களை நெகிழ வைத்தது.
வடகொரியாவின் தொழிலாளர் கட்சி 1945 - ம் ஆண்டு, அக்டோபர் 10 - ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து கிம் குடும்பம் வடகொரியாவைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செலுத்திவருகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் வடகொரியாவில் கொண்டாட்டம் களைகட்டும். இந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கால் கொண்டாட்டம் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த வருடமும் இல்லாத வகையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே வடகொரியா விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையொட்டி, ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பவள விழா கொண்டாட்டத்தையொட்டி, வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கில் ராணுவ அணிவகுப்பும் நடைபெற்றது. 2018 - ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா தனது ராணுவ அணிவகுப்பில் பயன்படுத்தவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 10 - ம் தேதி நடத்தப்பட்ட அணிவகுப்பில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுனைகளை அணிவகுக்கச் செய்தது. வடகொரிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில், இருபத்தி இரண்டு சக்கரங்களுடன் கூடிய மிகப்பெரிய வாகனத்தில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை ஏற்றி கொண்டு வரப்பட்டது.
அப்போது, உரையாற்றிய அதிபர் கிம், அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் உதவியதற்காக ராணுவத்தினருக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். மேலும், குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தவறியதற்கு மன்னிப்பு கோரினார். அதிபர் கிம் ஜாங் உன் கண்ணீர் விட்டதைப் பார்த்த பொதுமக்களும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டனர்...