சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு டாஸ்மேனியன் டெவில்கள் என்றழைக்கப்படும் விலங்குகள் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
உலகிலேயே ஆஸ்திரேலியாவில் தான் பாலூட்டி இனங்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் 2019 - 2020 ம் ஆண்டில் ஏற்பட்ட புதர் தீ காரணமாக சுமார் 300 கோடி விலங்குகள் பாதிக்கப்பட்டன.
அவற்றில் பெரும்பாலான உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதனால், ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட டாஸ்மேனியன் டெவில்களை மீண்டும் அதன் தாயகத்தில் விடுவதன் மூலம் சுற்றுச்சூழலைச் சமநிலைப்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலியர்கள் கருதுகின்றனர்.
பாலூட்டி இனங்களின் வயிற்றில் பை உள்ள இனத்தைச் சேர்ந்த விலங்கு கங்காரு. அதேபோன்ற ஒரு விலங்குதான் ‘டாஸ்மேனியன் டெவில்’. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவில் மட்டும் தற்போது காணப்பட்டதால், இதற்கு ’டாஸ்மேனியன் டெவில்’ என்று பெயர்.
கரிய நிறம், கூரிய பற்களைக் கொண்ட இந்த விலங்கு இறந்த உடல்களைத் தின்னும். சுமார் எட்டு கிலோ எடை கொண்டிருக்கும். பயம் ஏற்படும் அளவுக்கு அலறும். அதனாலேயே இதனை டெவில் என்று அழைப்பர். வளைகளில் வாழும் இந்த விலங்கு இறந்த உடல்களைத் தின்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.
டாஸ்மேனியன் டெவில்களின் பூர்வீகம் ஆஸ்திரேலியா தான். அங்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சக்கணக்கான டாஸ்மேனியன் டெவில்கள் வாழ்ந்து வந்தன. ஆனால், விலங்குகளால் வேட்டையாடப்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் அந்த உயிரினம் மொத்தமாக அழிந்தது.
உயிர் தப்பிய டாஸ்மேனியன் டெவில்கள் டாஸ்மேனியா தீவில் வாழ்ந்து வந்தன. ஆனால், அங்குப் பரவிய அரிய வகை முகப் புற்றுநோயால், 1990 வாக்கில் ஒன்றரை லட்சம் எண்ணிக்கையில் வாழுந்துவந்த டாஸ்மேனியன் டெவில்கள் தற்போது சுமார் 25,000 என்ற எண்ணிக்கையில் மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்த நிலையில், அழிவின் விளிம்பில் உள்ள டாஸ்மேனியன் டெவில்களைப் பாதுகாக்க ‘ஆஸி ஆர்க்’ எனும் அமைப்பு திட்டமிட்டது. அதன்படி, நோய் தாக்காத 26 டாஸ்மேனியன் டெவில்களை மீண்டும் அதன் தாயக பூமியான ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டுவந்து விடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆஸி ஆர்க் அமைப்பின் தலைவர் டிம் பால்க்னர், ‘‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் டாஸ்மேனியாவில் அழிவின் விளிம்பில் உள்ள டாஸ்மேனியன் டெவில்களையும் பாதுகாக்க முடியும். அதே வேளையில், ஆஸ்திரேலியாவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலையும் இந்த உயிரினத்தால் சமப்படுத்த முடியும்..!