கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 3 நாட்களுக்குப் பின் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
கடந்த 2ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, காய்ச்சல் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்ததன் காரணமாக, 3ம் தேதி அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்தவாறே அலுவலக பணிகளை மேற்கொண்ட ட்ரம்புக்கு பிரத்யேக சிகிச்சை வழங்கப்பட்டது. இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த தனது ஆதரவாளர்களை காண்பதற்காக வெளியே வந்த ட்ரம்ப், காரில் இருந்தவாறே அவர்களை பார்வையிட்டு கையசைத்து சென்றார்.
இந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு அதிபர் ட்ரம்ப் இன்று அதிகாலை, மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
முன்னதாக, 20 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்ததை காட்டிலும், தற்போது சிறப்பாக உள்ளதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ட்ரம்புக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பேசிய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பேராசிரியர் ஜொனதன் ரெய்னர், உலகில் வேறு எந்த நபருக்கும் வழங்கப்படாத சிகிச்சை அதிபர் ட்ரம்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிப்பதற்கான சிகிச்சையுடன், பக்கவிளைவுகள் காரணமாக முறைப்படி ஒப்புதல் பெறாத ரெமிடெசிவிர் மருந்தும், அதிபர் மற்றும் அவசரகால பயன்பாடு எனும் முறையில் ட்ரம்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்ககூடிய, டெக்ஸாமெதாசோன் மருந்தும் நோய்த்தொற்றின் வீரியத்தை குறைக்க ட்ரம்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சைக்காக உலகிலேயே வேறு யாருக்கும் இந்த 2 மருந்துக் கலவைகள் வழங்கப்படவில்லை என ரெய்னர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மருந்துக்கலவையின் பயன்பாட்டால் பக்கவிளைவுகளுக்கான அச்சுறுத்தல் இருந்தாலும், உலகத் தரம் வாய்ந்த மருத்துவக்குழு உடன் இருப்பதால், அதிபர் ட்ரம்ப் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ளார் என, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.