ஆர்மீனியா மற்றும் அஸர்பைஜானுக்கு இடையே தீவிரமடைந்து வரும் போரில் துருக்கி, ஈரான், ரஷ்யா ஆகிய அண்டை நாடுகள் தலையிடத் தொடங்கியுள்ளன.
கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் ஆர்மீனியாவுக்கும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அஸர்பைஜானுக்கு இடையேயுள்ள நகோர்னோ, கராபக் மலைப் பகுதிகள் தொடர்பாக 1988 - ம் ஆண்டிலிருந்து 1994 ம் ஆண்டு வரை போர் நடைபெற்றது. இந்தப் போரில் சுமார் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். 10 லட்சம் பேர் புலம்பெயர்ந்தனர். போர் முடிவில் நகோர்னோ, கராபக் பகுதிகள் அஸர்பைஜானின் ஒரு பகுதியாக உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், பிரிவினைவாத அர்மீனிய இனத்தவர்களால் தான் இந்தப் பகுதி இன்னும் கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால், நீண்ட காலமாகவே இந்தப் பகுதியில் அமைதியற்ற சூழலே நிலவி வருகிறது.
தற்போது, நகோர்னோ - கராபக் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் இரு நாடுகளும் கனரக பீரங்கிகளுடன் களமிறக்கியுள்ளன. அதனால், உயிர் சேதமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருதரப்பிலும் 95- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் பத்துக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போர் காரணமாக, இரு நாட்டிலும் ராணுவ சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் அண்டை நாடுகளும் தலையிடும் சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில், ரஷ்யாவின் ராணுவ தளம் ஆர்மீனியாவில் அமைந்துள்ளது. ஆனாலும், ரஷ்யா அஸர்பைஜானுடன் நல்லுறவையே பேணி வருகிறது. நிலைமையை உனிப்பாகக் கவனித்து வரும் ரஷ்யா, இரு நாடுகளும் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளது. ஈரான் இரு நாடுகளுக்கும் மத்தியஸ்தம் செய்வதாக அறிவித்துள்ளது. ஆர்மீனியர்கள் அதிகம் வாழும் பிரான்ஸ் நாடும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
மற்ற நாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் வேளையில், துருக்கி அதிபர் எர்டோகன் , ‘அர்மீனியா தனது ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆர்மீனியா, அஸர்பைஜான் வழியாக பல நாடுகளுக்கும் எண்ணெய் குழாய்கள் செல்கின்றன. அதனால், இந்தப் போரை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.