அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி இன்று நடைபெறவுள்ள முதல் நேரடி விவாதத்தில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக இரு கட்சி சார்பிலும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேருக்கு நேர் பங்கேற்கும் மூன்று விவாத நிகழ்ச்சிகளும், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவோர் பங்கேற்கும் ஒரு விவாத நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்ச்சியை அதிபர் தேர்தல் விவாத ஆணையம் நடத்திவருகிறது. அதன்படி, டிரம்ப் - பிடன் இடையேயான முதல் விவாத நிகழ்ச்சி இன்று இரவு 9 மணிக்கு ஒஹையோ மாகாணம் கிளவ்லேண்டில் நடைபெறுகிறது.
ஒன்றரை மணி நேர விவாதத்தில் டிரம்ப்பும் ஜோ பிடனும் பங்கேற்கின்றனர். இரு வேட்பாளர்களிடையே அவர்களது சாதனைகள், திட்டங்கள் குறித்து நேரடியாக விவாதம் நடைபெறும். இது நேரலையாக பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது.