உலகிலேயே முதன் முதலாக, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பயணிகள் விமானத்தை இயக்க ஏர்பஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பூமிக்கு அடியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள்கள் மூலம் சுற்றுச்சூழல் மாசு உருவாகிறது. ஒவ்வொரு ஆண்டும் 20 பில்லியன் டன் அளவிலான கார்பன் டை ஆக்சைடு வளிமண்டலத்தில் சேர்ந்து, பூமியின் சுற்றுச்சூழலையே மோசமாக்கி வருகிறது. மேலும், பூமியின் அடியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள்கள் குறைந்து கொண்டும் வருகின்றன. இந்த எரிபொருளுக்கு மாற்றாக அணு சக்தி, ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை நோக்கி உலகம் நகரத் தொடங்கியுள்ளது.
மாற்று எரிபொருள்களில் அனைவரின் கவனத்தையும் பெற்றிருப்பது ஹைட்ரஜன் தான். ஏனெனில், ஹைட்ரஜன் மாசுகளை வெளியிடாத தூய்மையான எரிபொருளாகும். அதை எரிக்கும் போது நீராவி மட்டுமே வெளிவரும். தற்போது ஹைட்ரஜன் எரிபொருளைப் பயன்படுத்தி ராக்கெட்டுகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், ஹைட்ரஜனின் எளிதில் தீப்பற்றும் பண்பு கொண்டது. அதன் காரணமாக அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களில் ஹைட்ரஜனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. அதற்கான, தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தான் ஏர்பஸ் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் விமானத்தை 2035 - ம் ஆண்டில் இயக்கத் திட்டமிட்டுள்ளது. ’சீரோஇ’ (ZEROe - சீரோ எமிஸ்ஸன்) என்று திட்டத்துக்குப் பெயரிட்டு இந்தத் திட்டத்தை ஏர்பஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
மற்ற சாதாரண விமானங்களைப் போல இல்லாமல் திரவ ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இன்ஜீன்களைக்கொண்டு மூன்று விதமான விமானங்கள் உருவாக்கப்படவுள்ளன. டர்போபேன் ஜெட் என்ஜின்களைக் கொண்டு இயங்கும் இரண்டு பயணிகள் விமானங்கள் மற்றும் ’ஹைப்ரிட் விங் பாடி’ எனும் தொழில்நுட்பத்தில் இயங்கும் விமானம் என்று மூன்று விமானங்களை வடிவமைக்க உள்ளது.
இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால் விமான சேவை வரலாற்றில் சிறப்பான வெற்றியாக கருதப்படும். காற்று மாசுவும் பெரிய அளவில் குறையும்...