தொடர் விபத்துகளால் வானில் பறக்க தடை விதிக்கப்பட்ட போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கான பயிற்சியை, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம், லண்டனில் வரும் திங்கட்கிழமை முதல் ஆய்வு செய்ய உள்ளது.
லண்டன் கேட்விக் விமான நிலையத்தில், தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெறும் இந்த ஆய்வில், அமெரிக்கா, கனடா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான போக்குவரத்து ஆணையங்கள் மற்றும் விமான குழுவினர் பங்கேற்பார்கள். அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக விதிகளுக்கு ஏற்ப போயிங் நிறுவனம் செய்துள்ள மாற்றங்களையும் தொழில்நுட்பக் குழு ஆய்வுக்கு உட்படுத்தும்.
இதன் பிறகே, போயிங் 737 மேக்ஸ் விமானங்களை பறக்க அனுமதிப்பதா என்பது குறித்து, அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் முடிவு செய்யும். 346 பேரை பலி கொண்ட 2 தொடர் விபத்துகளால், மிகச்சிறப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்த போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் உலகம் முழுவதும் பறக்க தடை விதிக்கப்பட்டது.