மாறிவரும் காலநிலை மாற்றம், ஆமைகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கால நிலை மாற்றத்தால் கடற்கரையில் உள்ள கூடுகளிலிருந்து கடல் நீரைச் சென்று சேர்வதற்குள் ஆமைக் குஞ்சுகள் பாதிப்புக்கு உள்ளாகி இறந்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் அருகி வரும் உயிரினங்களில் ஒன்றாக ஆமை உள்ளது. ஆமைகள் மனிதர்களாலும் மற்றும் மனிதர்கள் கடலுக்குள் வீசும் கழிவுப் பொருள்களாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கடற்கரைப் பகுதிகளில் பெருகும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்களின் வலைகளால் ஆமைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இந்தப் பிரச்னை மட்டும் போதாது என்று தற்போது மாறி வரும் காலநிலை மாற்றமும் ஆமைகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்கரைப் பரப்பில் அதிகரிக்கும் வெப்ப நிலையால் ஆமைக்குஞ்சுகள் கடற்கரைக் கூட்டுக்குள்ளேயே இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை மாற்றம் ஆமைகளின் பாலினத்தைப் பாதிக்கின்றன. சூடான காலநிலை காரணமாக அதிகளவு பெண் ஆமைகள் உருவாகின்றன. ஆனால், அதிக வெப்ப நிலையால் முட்டையிலிருந்து ஆமைக் குஞ்சுகள் பொரித்து வெளியே வருவதைத் தடுத்துவிடுகின்றன. அப்படியே பொரித்தாலும், கடற்கரையிலிருந்து கரையைச் சென்று சேர்வதற்குள் பெரும்பாலான ஆமைக் குஞ்சுகள் இறந்துவிடுகின்றன. இது உண்மையிலேயே வருத்தப்படவேண்டிய விஷயம் என்று கூறியுள்ளனர் ஆராய்ச்சிளார்கள்!
மத்திய தரைக்கடல் பகுதியில் செயல்படும் ஆமைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மெடச்செட், “கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை அதிகமாகிவருகிறது. கடல் நீர்மட்டம் அதிகமாகி வருகிறது. புயல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதனால் ஆமைக்குஞ்சுகள் கூட்டுக்குள்ளேயே இறந்துவிடுகின்றன என்றும் முட்டையிலிருந்து பொரித்து வெளியே வரும் ஆயிரம் ஆமைக் குஞ்சுகளில் ஒன்றிரண்டுதான் தப்பிப் பிழைத்து வளர்கின்றன. அவற்றின் வாழ்வு கடினமாகிவிட்டது” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.