துருக்கியின் இஸ்தான்புல்லில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்த குற்றவாளிகள் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஜமால் கசோகியின் குடும்பத்தினர் அளித்த மன்னிப்பு காரணமாக குற்றவாளிகளின் தண்டணை குறைக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற நாளிதழ்களில் சவுதி அரேபிய அரசை தொடர்ந்து விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்தார். குறிப்பாக சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். சவுதி அரேபியாவில் தன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதை உணர்ந்த ஜமால் கசோகி அமெரிக்காவில் குடியேறி அங்கேயே வசித்தார்.
இந்த நிலையில், கடந்த 2018 ஆம் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி அரேபிய தூதரகத்துக்கு தன் திருமணம் தொடர்பான ஆவணங்களை பெற ஜமால் கசோகி தன் மனைவி ஹோட்டிஸ் சென்ஜியுடன் (Hatice Cengiz) துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்குச் சென்றார். தன் காதலியை சென்ஜி தூதரகத்துக்கு வெளியே நிற்க வைத்து விட்டு கசோகி மட்டும் தூதரத்துக்குள் சென்றார்... உடன் காலனும் சென்றான். தூதரகத்துக்குள்ளே சென்ற கசோமி மீண்டும் வெளியே வரவே இல்லை. தூதரகத்துக்குள்ளேயே கொலை செய்யப்பட்டு உடலை அமிலத்தில் கரைத்து விட்டனர் கொலையாளிகள்.
உலகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் தூண்டுதலின் பேரில்தான் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. எனினும், ஜமால் கசோகி கொலையில் தொடர்புடையதாக 8 பேரை கைது செய்து விசாரணை நடத்திய சவுதி அரேபிய அரசு 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்த நிலையில் , கடந்த மே மாதத்தில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது, கொலை செய்யப்பட்ட ஜமால் கசோகியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன்கள் தங்களை தந்தையை கொலை செய்தவர்களை மன்னித்து விட்டதாக திடீரென அறிவித்தனர்.
இஸ்லாமிய சட்டத்தின்படி, கொலை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தாலும், கொலையானவர்களின் குடும்பத்தினர் கொலையாளிகளை மன்னித்து விடுவதாக அறிவித்தால் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் , ஜமால் கசோகியை கொலை செய்தவர்கள் மரண தண்டனையிலிருந்து தப்பித்துள்ளனர். ஜமால் கசோகி கொலையாளிகளில் 5 பேருக்கு 20 ஆண்டுகள் சிறையும் ஒருவருக்கு 10 ஆண்டுகளும் மேலும் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.