கொரோனாவைக் குணப்படுத்த ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதனை நடைபெற்று வருகிறது. முதற்கட்டச் சோதனை முடிவுகள் மருத்துவ இதழான லேன்சட்டில் வெளியிடப்பட்டுள்ளன.
சோதனையில் 42 நாட்களாகக் கிடைத்த தரவுகளின்படி, நோயைக் குணப்படுத்துவதற்கான ஆன்டிபாடியை 21 நாட்களில் தூண்டுவதாகவும், இந்த மருந்தைச் செலுத்தியதில் எந்த எதிர்மறை விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 76 பேருக்கு மருந்து செலுத்தப்பட்டதில், மிகவும் பாதுகாப்பானது எனத் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. உறைந்த நிலையில் உள்ள மருந்து, உறைந்து உலர்ந்த நிலையில் உள்ள மருந்து என இருவகையில் செலுத்திப் பார்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
உறைந்த மருந்து பெருமளவில் தயாரித்துப் பயன்படுத்தவும், உலக அளவில் விற்பனை செய்வதற்கும் ஏற்றது எனக் கருதியுள்ளனர். உறைந்து உலர்ந்த நிலை மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பராமரிக்க வேண்டும் என்பதால் இதைப் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த மருந்துகள் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் செல்லும்போது ஆன்டிபாடி, டி செல் ஆகிய இருவகைகளிலும் உடலின் நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டிக் கிருமியைத் தாக்கி அழிப்பதாகவும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.