அமெரிக்காவில் வீசிய லாரா சூறாவளியால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை, டெக்சாஸ்-லூசியானா எல்லையில் வீசிய இந்த சூறாவளி, அண்மைக்காலங்களில் வீசிய சூறாவளிகளில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. சூறாவளியால் முக்கிய துறைமுகங்களான லேக் சார்லஸ், போர்ட் ஆர்தர், பெமவுண்ட் ஆகியன மூடப்பட்டன.
அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய பங்குவகிக்கும் போர்ட் ஆஃப் ஹூஸ்டன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை அன்றே மூடப்பட்டது. லாரா சூறாவளியால் அமெரிக்காவின் பல திரவ இயற்கை எரிபொருள் உற்பத்தி ஆலைகள் பாதிக்கப்பட்டன.
துறைமுகங்கள் மூடப்பட்டதால், கடலில் இருந்து அகழப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் நாளொன்றுக்கு 10 லட்சம் பேரல்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.