சிங்கப்பூரில் கொசுக்களை கொண்டே கொசுவால் பரவும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்.
அந்நாட்டில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு, 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நோய் பரவலை மட்டுப்படுத்த கொசு-ஏவுதல் தொழில்நுட்பத்தின்படி டப்பாக்களில் அடைத்து ஆய்வகத்தில் வளர்க்கப்படும் ஆண் ஈடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் திறந்து விடப்படுகின்றன.
வோல்பாசியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஆண் கொசுக்கள், டெங்குவை பரப்பும் பெண் கொசுவுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்யும் போது, உயிரியல் ரீதியாக பொருந்தாததால், பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்காது என்றும் இதனால் கொசுக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என்றும் இத்திட்டத்தின் தலைவர் என்ஜி லீ சிங் விளக்கினார்.