பாகிஸ்தானில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 90 ஆண்டுகளில் இப்படியொரு பேய் மழையை கராச்சி நகரம் கண்டதில்லை என்று சொல்கிறார்கள். மழை வெள்ளத்தில் சிக்கி 90- க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவால் முடங்கிப் போய் கிடந்த கராச்சி மக்களை இப்போது வெள்ளமும் முடக்கிப் போட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கராச்சி நகரின் 50 சதவிகித வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், லட்சக்கணக்கான வீட்டு உபயோகப் பொருள்கள் சேதடைந்துள்ளன.
கார்கள், பேருந்துகள் வெள்ளத்தில் மூழ்க்கிக் கிடக்கின்றன. பேருந்தில் பயணித்தவர்கள் அதன் கூரை மீது ஏறி உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வழக்கமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை காவல்துறையினர் மீட்பார்கள். கராச்சியில் காவல்துறையினர் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ள அவர்களை மக்கள் கயிறு கட்டி கடும் பேராட்டத்துக்கு பிறகு மீட்ட சம்பவமும் நிகழ்ந்தது. சென்னை நகருக்கு அண்ணா சாலை அடையாளம் என்பது போல கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலை ரொம்பவே பிரபலம். பிசியான இந்த ஜின்னா சாலையில் வெள்ளம் காரணமாக வாகனங்கள் ஓடுவதில்லை... மாறாக கப்பலில் போக வேண்டிய கண்டெய்னர்கள் மிதந்து சென்று கொண்டிருக்கின்றன.
ஒவ்வோரு ஆண்டும் கராச்சி நகரில் மழை கொட்டி தீர்ப்பதும், மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்குள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. கராச்சி நகரத்தின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வெள்ள நீர் நகருக்குள் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கராச்சி மக்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.