புல்வாமா தாக்குதலில், கொல்லப்பட்ட தீவிரவாதி எடுத்த புகைப்படங்கள், செல்போன் பேச்சுக்கள் உள்ளிட்டவற்றை வைத்து வழக்கில் துல்லியமாக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான பரூக் என்பவன், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வழியில் எடுத்த ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள், செல்போன் பதிவுகள் , குண்டு தயாரிப்பதை பற்றி அவன் எடுத்த படங்கள் ஆகியவற்றை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
ஜெய்ஷே முகம்மதின் முக்கிய தீவிரவாதிகளுடன் வாட்ஸ்ஆப்பில் அவன் நடத்திய உரையாடல் பதிவுகளும் விசாரணைக்கு உதவிகரமாக இருந்தன.
காஷ்மீரை சேர்ந்த ஷக்கீர் பஷீர் மேக்ரே என்ற இளைஞரின் புகைப்படம் பரூக்கின் மொபைலில் பதிவாகி இருந்தது. இது என்ஐஏ அதிகாரிகளுக்கு ஜாக்பாட் அடித்ததை போல மாறி, விசாரணையை துரிதமாக நடத்த உதவியது. புல்வாமாவை சேர்ந்த இந்த நபர் சிஆர்பிஎப் வாகன அணிவகுப்பு குறித்த தகவலை தீவிரவாதிகளுக்கு கூறியதாக கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டான்.