அணு ஆயுத துறை உருவாகி 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, உலகில் இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் பெரிய, சக்தி வாய்ந்த அணுகுண்டு, கடந்த 1961 ல் வெடித்துப் பார்க்கப்பட்டது குறித்த வீடியோவை ரஷ்யா இப்போது வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தலைமையில் இருந்த சோவியத் யூனியனின் அணு ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய அணுகுண்டுக்கு RDS 220 என்று பெயரிடப்பட்டாலும் அது சார் பாம்பா என்ற செல்லப்பெயரில் அழைக்கப்பட்டது.
Tu-95 சிறப்பு விமானம் வாயிலாக நோவாயா ஜெம்லயா என்ற தீவை ஒட்டியுள்ள மட்டோசிக்கின் நீரிணைப்பகுதியில் பாரசூட் உதவியுடன் 1961 அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அணுகுண்டு வீசப்பட்டது.
அணு ஆயுத துறை உருவாகி 75 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, உலகில் இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் பெரிய, சக்தி வாய்ந்த அணுகுண்டு, கடந்த 1961 ல் வெடித்துப் பார்க்கப்பட்டது குறித்த வீடியோவை ரஷ்யா இப்போது வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நிலவிய அந்த காலகட்டத்தில் 50 மெகாடன் திறனுடன், அதாவது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டை போன்று 3800 அதிக சக்தி வாய்ந்த இந்த அணுகுண்டை வெடித்துப் பார்த்துப் பார்க்க அதிபர் குருச்சேவ் உத்தரவிட்டார்.
குண்டு வெடித்ததும் அதன் நெருப்பு பிழம்பு 20 கிலோ மீட்டர் உயரத்திற்கு பாய்ந்தது. 35 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதன் கதிரியக்க அலைகள் பரவின. 40 வினாடிகள் கழித்து தீப்பிழப்பின் உச்சம் 65 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியதுடன், அணுகுண்டின் வீரியம் 90 கிலோமீட்டர் சுற்றளவிற்குப் பரவியது. குண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து 55கிலோ மீட்டர் தொலைவில் இருந்த Severny என்ற ராணுவ நகரத்தின் கட்டிடங்கள் உடைந்து சிதறின.
நிலப்பரப்பில் இருந்து 4 கிலோ மீட்டர் உயரத்தில் அணுகுண்டு வெடித்தாலும், அதன் அதிர்வு உலகம் முழுதும் ரிக்டர் அளவையில் 5 ஆக பதிவானது. அணுகுண்டை போட்ட Tu-95 விமானம் அதிர்வு காரணமாக சரேலேன 1000 மீட்டர் கீழே தள்ளப்பட்டாலும் பின்னர் சுதாரித்து தரையிறங்கியது.
அணுகுண்டு வெடித்த காட்சியை நார்வேயில் உள்ள Jarfjord மலையில் இருந்த ராணுவ வீரர்கள் பார்த்தனர். 1000கிலோ மீட்டர் தொலைவுக்கு அணுகுண்டு வெடித்த காட்சி தென்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஸ்கான்டிநேவியன் தீபகற்பம் முழுதும் கதிரியக்கம் பரவி சோவியத் யூனியன் கடும் கண்டனத்திற்கு ஆளானது. உள்நாட்டிலும் அணுகுண்டு சோதனைக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.
சார் பாம்பாவை தொடர்ந்து அமெரிக்காவும் பசிபிக் கடலில் அணுகுண்டு சோதனையை நடத்தியது. ஆனால் அது ஏற்படுத்திய பாதக விளைவை தொடர்ந்து காற்றுவெளியிலும், விண்வெளியிலும், நீருக்கடியிலும் அணுகுண்டு சோதனை நடத்த தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் இரண்டு நாடுகளும் 1963 ல் கையெழுத்திட்டன. அதற்குப் பிறகு பூமிக்கு அடியில் மட்டுமே அணுகுண்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன.