அண்மையில் கொரோனா வைரசுக்கான மருந்தை பதிவு செய்துள்ளதாக கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரஷ்யா அதிபர் புதின் அறிவித்திருந்தார். ஸ்புட்னிக்-5 என்ற பெயர் கொண்ட அந்த தடுப்பூசி மாஸ்கோவிலுள்ள Gamaleya Institute மற்றும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இணைந்து கண்டுபிடித்துள்ளன.
உலகின் பல நாடுகளும் ஸ்புட்னிக் -5 தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியிருந்தன. இந்த நிலையில், ரஷ்ய மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக இருந்த பேராசிரியர் அலெக்ஸான்டர் சுச்சாலின் (Alexander Chuchalin) தன் பதவியை ராஜினாமா செய்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரஷ்ய நுரையீரல் தேசிய ஆராய்ச்சி கழகத்தை உருவாக்கியவர் அலெக்ஸான்டர் சுச்சாலின் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்புட்னிக் மருந்தை இப்போது பதிவு செய்யக் கூடாது என்று அலெக்ஸான்டர் சுச்சாலின் தடுத்தாகவும் அதையும் மீறி மருந்து பதிவு செய்யப்பட்டதால் அவர் ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது.
'' பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இந்த மருந்தை பதிவு செய்வதை தடுக்க முயன்றேன். ஆனால், என்னால் முடியாமல் போய் விட்டது . Gamaleya Institute இயக்குனர் பேராசிரியர் அலெக்ஸாண்டல் ஜின்ட்ஸ்பர்க், ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த மருத்துவரும் கர்னலுமான செர்ஜே போரிசெவிக், ஆகியோர்தான் அவசர அவசரமாக ஸ்புட்னிக் மருந்தை பதிவு செய்ய காரணமாக இருந்தனர்.
தடுப்பூசியை பதிவு செய்வதற்கு முன், சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினீர்களளா என்றால் நிச்சயம் இல்லை. மெடிக்கல் எத்திக்ஸ் இந்த விஷயத்தில் மீறப்பட்டுள்ளளது. இந்த விஷயத்தில் பல விஞ்ஞானிகள் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகள் விடுவது என்னை சோர்வடைய‘ செய்துள்ளது . முதலில் தடுப்பூசி மனிதர்களின் பாதுகாப்புக்கு உகந்ததாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது எல்லாவற்றுக்கும் மேலானது'' என்று அலெக்ஸாண்டர் சுச்சாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போதுதான் ரஷ்யாவில் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருவதாகவும் ஆனால், உலகளவில் மருந்துக்கான ஆர்டரை பெறுவதற்கும் உற்பத்தியை அதிகரிக்கவும் ரஷ்யா எல்லா நாடுகளையும் முந்தி கொண்டு ஸ்புட்னிக் மருந்தை பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது