அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்மணி கமலா ஹாரிஸ் குறித்து அவரது சகோதரி மாயா ஹாரிஸ் உணர்வுபூர்வமான வீடியோ ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில், கமலா ஹாரிஸ் யார் என்று தெரிய வேண்டுமானால் நீங்கள் எங்கள் தாயார் யார் என்பதை அறிந்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லாவற்றையும் சாத்தியமாக்கிய பெண்மணி தங்களது தாயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையை சேர்ந்த சியாமளா கோபாலனுக்கும், ஜமைக்காவை சேர்ந்த ஹாரிஸ் என்ற கல்லூரி பேராசிரியருக்கும் மகளாக பிறந்து, அமெரிக்காவின் முதலாவது ஆசிய-அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் என்ற பெருமையை எட்டியுள்ள கமலா ஹாரிஸ் குறித்து உலக மக்கள் ஆர்வத்துடன் இணையத்தில் அலசி வருகின்றனர்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுடன் கலந்து ஆலோசித்து கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தேர்வு செய்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.