ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எம்.வி.வாகாஷியோ எனும் சரக்குக் கப்பல் நான்காயிரம் டன் அளவுக்குக் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, ஜூலை 25 - ம் தேதி மொரீசியஸ் அருகே பவளப்பாறைகளின் மீது மோதியதில் விபத்துக்குள்ளானது. இதனால் ஆகஸ்ட் 7 - ம் தேதி சுற்றுச்சூழல் அவசர நிலைப் பிரகடனத்தை அறிவித்தார் மொரீசியஸ் பிரதமர் பிரவீந்த் ஜூக்னாத்.
இந்த விபத்தினால் கப்பலில் விரிசல் ஏற்பட்டு ஆயிரம் டன் அளவுக்கும் அதிகமான கச்சாய் எண்ணெய் இந்தியப் பெருங்கடலில் கலந்தது. இந்த எண்ணெய் காடுகள், கடல் வாழ்விடங்கள், வெள்ளை - மணல் கடற்கரைப் பகுதிகளை மூழ்கடித்துள்ளது. இதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையை எதிர்நோக்கியுள்ளது மொரீசியஸ். இந்த விபத்து மூலம் கடல் உயிரினங்கள் அதிகம் வாழும் ப்ளூ பே, பாயிண்ட் டி எஸ்னி மற்றும் மஹேபெர்க் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வாழும் பவளப் பாறைகள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் கொத்துக்கொத்தாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து மொரீசியஸ் நாட்டின் உணவுப் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்..
எண்ணெய்யை அகற்றும் தொழில்நுட்பம் இல்லாததால் பிரான்ஸ் நாட்டின் உதவியைக் கோரியுள்ளது மொரீசியஸ். பிரான்ஸ் நாட்டின் கப்பல் மற்றும் ராணுவ தொழில் நுட்ப நிபுணர்கள் மொரீசியஸ்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, மொரீசியஸ் பகுதியில் வானிலை சீராக இல்லாததால் கடலில் அலைகள் அதிகமாக எழுகின்றன. இதனால் பிரான்ஸ் நாட்டின் உதவி கிடைக்குமுன்னே எண்ணெய் படலங்கள் கடல் பகுதி முழுவதும் பரவிவருகின்றன.
சுற்றுச் சூழலைக் காக்க, கடலில் கலந்த ஆயிரம் டன்னுக்கும் அதிகமான கச்சா எண்ணெய்யைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மொரீசியஸ் பொதுமக்கள். முகத்தில் ஒரேயொரு மாஸ்கை மட்டும் அணிந்துகொண்டு எண்ணெய்யையும், அதன் கசடுகளையும் வாளியில் அள்ளி பேரல்களில் நிரப்பி வருகின்றனர்.
சுற்றுலாவை நம்பியே வாழும் மொரீசியஸ் பொருளாதாரம் கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கப்பல் விபத்து மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!