நியூசிலாந்தில் தேர்தல் வருவதை முன்னிட்டு இந்து கோயிலுக்கு சென்று அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா வழிபாடு நடத்தினார்.
நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன்( Jacinda Ardern )இருந்து வருகிறார். நியூசிலாந்தில் கொரோனா பரவலை திறமையாக செயல்பட்டு கட்டுப்படுத்தியதாக ஜெசிந்தாவை மக்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 100 நாள்களாக நியூசிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் நியூசிலாந்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து , ராதாகிருஷ்ணா மந்திருக்கு சென்று ஜெசிந்தா வழிபாடு நடத்தினார். கோயிலுக்குள் நுழையும் முன் ஜெசிந்தா தன் காலில் அணிந்திருந்த காலணியையும் கழற்றி விட்டே வெறுங்காலுடன் சென்றார். கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஜெசிந்தாவின் நெற்றியில் அர்ச்சகர் திருநீரும் பூசினார். தொடர்ந்து ஜெசிந்தாவுக்கு கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.
பின்னர், கோயில் சார்பாக சிறிய விருந்தும் நடைபெற்றது. விருந்தில் கலந்து கொண்ட ஜெசிந்தா இந்திய உணவான பூரி மசலாவும் சாப்பிட்டு ருசி பார்த்தார். அப்போது, நியூசிலாந்து இந்திய தூதரக அதிகாரி முக்தேஷ் பர்தேஷி (Muktesh Pardeshi) உடன் இருந்தார். நியூசிலாந்து பிரதமர் இந்து கோயில் சென்று வழிபட்டது அந்த நாட்டில் வாழும் இந்தியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கோயிலில் வழிபட்ட வீடியோவையும் ஜெசிந்தா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட அதை இந்தியர்கள் பகிர்ந்து வருகின்றனர்.'' திறமையான ஆளுமை மிக்கத் தலைவர்... அனைத்து கலாசாரத்தையும் மதிக்கக தெரிந்த தலைவர் உங்களை கடவுள் ஆசிர்வாதிப்பார்'' என்று ஜெசிந்தாவுக்கு இந்தியர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் தொழிலாளர் கட்சியின் தலைவராக உள்ள ஜெசிந்தா 40 வயதே நிரம்பிய இளம் அரசியல் தலைவர் ஆவார்.