சீனா, உகான் மாகாணத்தில் தோன்றி உலகம் முழுவதும் பரவி பெருந்துயரத்தை விளைவித்துக்கொண்டிருக்கிறது, கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்; சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் கோரப்பிடியே இன்னும் குறையாத நிலையில் டிக் - போர்னே எனும் புதுவகை வைரஸ் ஒன்று கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஜியாங்சு, அன்ஹூய் மாகாணங்களில் வேகமாகப் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை 60 பேருக்குப் பரவி ஏழு பேரின் உயிரைப் பறித்துள்ளது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.
ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த நஞ்சிங் என்ற பெண் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றார். கொரோனா நோய் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது. தொடர் சிகிச்சை பெற்ற பிறகும் காய்ச்சல் குணமாகவில்லை. அவரது ரத்தத்தில் ரத்த வெள்ளையணு மற்றும் தட்டு அணுக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாகக் குறைந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். ஒரு மாதத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீடு திரும்பினார் நஞ்சிங்.
அதன்பிறகு, இவரைப்போன்றே ரத்த வெள்ளையணு மற்றும் தட்டு அணு குறைந்து காய்ச்சலுடன் பலர் மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டனர். இந்த வகை நோய் அறிகுறிகளுக்கு Severe Fever with Thrombocytopenia Syndrome என்று பெயர். அவர்களின் ரத்த மாதிரிகளை ஆராய்ந்த போதுதான் புது வகை வைரஸ் தொற்றினால் இந்த வகை சிண்ட்ரோம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இந்த வைரஸ் SFTS Virus என்று அழைக்கப்படுகிறது. இது ஈ, ஒட்டுண்ணி மூலம் மனிதர்களுக்குப் பரவியதால் டிக் போர்னே என்றும் பெயர். இந்த வகை வைரஸ் சீனாவில் 2011 - ஆண்டிலேயே கண்டறியப்பட்டாலும் இப்போதுதான் அது பெரிய அளவில் பரவத் தொடங்கியுள்ளது .
டிக் போர்னே வைரஸ் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “இந்த வைரஸ் கொரோனாவைப் போல சவாலாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த வைரஸ் உண்ணி, ஈக்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியுள்ளது. மேலும் ரத்தம், சளி, இருமல் மூலமும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவுகிறது” என்று எச்சரித்துள்ளனர்!