லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடந்த வெடி விபத்தில் 100- க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். விபத்தில் 4. 000 பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த பெய்ரூட்டின் அஷ்ரஃபியா என்ற இடத்தில் இருந்த ஜார்ஜ் மருத்துவமனையும் பலத்த சேதமடைந்தது.
மருத்துவமனையில் பணியாற்றிய 4 நர்ஸ்கள் விபத்தில் இறந்து போனார்கள். 200 நோயாளிகள் காயமடைந்தனர். வெடி விபத்தின் போது, மருத்துவமனையில் பணி புரிந்த நர்ஸ் ஒருவர் கையில் மூன்று பச்சிளம் குழந்தைகளை வைத்து கொண்டு உடைந்து சிதறிய ஜன்னல் அருகே நின்று பேசுவது போன்ற புகைப்படம் வைரலாகியுள்ளது.
வெடி விபத்து நடந்த போது, மருத்துவமனையிலிருந்த ஏராளமான குழந்தைகளை அந்த நர்ஸ் காப்பாற்றியுள்ளார். அந்த முயற்சியின் போது, மூன்று பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்து கொண்டே யாருடனோ போனில் பதற்றத்துடன் பேசியிருக்கிறார். அப்போது, இந்த புகைப்படத்தை பிலால் மெரி ஜெவீஸ் என்ற போட்டோகிராபர் எடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில்,'' தன் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூரமான சம்பவத்தை பார்த்ததில்லை . இந்த மருத்துவனையில் பல குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. இந்த நர்ஸ் தன் கையில் மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு யாருடனோ போனில் பேச முயற்சித்தார். என் 16 வருட கால புகைப்பட அனுபவத்தில் போர்க்களத்தில் கூட இது போன்ற காட்சியை காணவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.