லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில், வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள அதிபயங்கர வெடிவிபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தால் ஏற்பட்ட நில அதிர்வு 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. பெய்ரூட் நகரிலிருந்து 200 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள சைப்ரஸ் நகரத்திலும் இந்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் இந்த வெடிச் சத்தத்தால் ஏற்பட்ட அதிர்வு உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெய்ரூட் துறைமுகத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. உடனே, தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், அப்போது வீசிய பலத்த காற்றால் தீ துறைமுகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்தத் தீயால் உருவான கரும்புகை வானில் எழுந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில், கண் இமைக்கும் நேரத்தில் துறைமுகத்தில் சேமித்து வைத்திருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் வெடித்துச் சிதறியது.
இந்த வெடி விபத்தால் துறைமுகத்தைச் சுற்றிலும் 1 கி.மீ தூரத்தில் இருந்த கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகின. வானத்தில் பல நூறு அடி உயரத்துக்கு ஆரஞ்சு நிற புகை எழுந்தது. மக்களுக்குக் கண் எரிச்சல், சுவாசப் பிரச்னையும் ஏற்பட்டது.
இந்தக் கோர விபத்தில் இதுவரை 100 - க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். 4000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக லெபனான் நாட்டின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த வெடிவிபத்தில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களும் மாயமாகியுள்ளனர். பலர் கட்டடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளனர். இதனால், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ட்விட்டரில், “துறைமுகத்தில் எந்தவிதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்ட 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்ததால் இந்த துர்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து உச்சபட்ச தண்டனை வழங்கப்படும்” என்று கோபமாகக் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து 3 நாள் தேசிய துக்க தினமும், 2 வார அவசர நிலையையும் லெபனான் பிரதமர் அறிவித்துள்ளார். இந்த வெடிவிபத்தினால் ஏராளமான மருத்துவமனைகளும் சேதமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை வேறு நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தீவிரவாதம், கொரோனா, பொருளாதார நெருக்கடி பிரச்னைகளால் சிக்கித் தவித்துவரும் லெபனானில் ஏற்பட்டுள்ள இந்தக் கோரவிபத்து சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது!
class="twitter-tweet">Death toll from Beirut blast rises to more than 70, says health minister https://t.co/nKrKj7Obeo pic.twitter.com/l6XSuY313u
— Reuters (@Reuters) August 5, 2020