அமெரிக்க வேலை வாய்ப்புகளை தேடும் இந்திய ஐ.டி.பணியாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விசா தடை உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதனால், அமெரிக்க நிறுவனங்கள் H-1B விசாக்கள் மூலம் வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைக்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், H-1B உள்ளிட்ட அனைத்து விதமான வெளிநாட்டு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு விசாக்களை இந்த ஆண்டு இறுதி வரை முடக்குவதாக டிரம்ப் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி அறிவித்தது.
இது குறித்த உத்தரவில் கையெழுத்திடுவதற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், மலிவான வெளிநாட்டு பணியாளர்களை நியமிப்பதற்காக அமெரிக்கர்களை வேலை நீக்கம் செய்யும் நடவடிக்கையை தமது நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்தார்.