உலகிலேயே முதன்முறையாக கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக ரஷ்யா அறிவித்திருப்பது, உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில், உலக நாடுகள் அனைத்தும் ஈடுபட்டுள்ளன.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, பரிசோதனைகளில் உள்ளன. இந்நிலையில் மாஸ்கோ நகரிலுள்ள Gamaleya ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியின் சோதனைகள் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ (Mikhail Murashko), Gamaleya நிறுவன தடுப்பூசியின் மனிதர்கள் மீதான சோதனை நிறைவடைந்துள்ளதாகவும், பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆகஸ்ட் 10 முதல் 12ம் தேதிக்குள் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டு, அக்டோபரில் மருத்துவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.