துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கிறிஸ்தவ ஆலயமாக இருந்து பிறகு அருங்காட்சியமாக மாற்றப்படட் பழம் பெருமை வாய்ந்த ஹாகியா சோபியா மசூதியாக மாற்றப்பட்டதற்கு கிரீஸ் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்தான்புல் நகரிலுள்ள ஹாகியா சோபியா (Hagia Sophia) என்ற பெயர் கொண்ட தேவாலயம், பழங்கால வழிபாட்டுத் தலமாகும். கி.பி 537- ம் ஆண்டு ரோமானிய பேரரசால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் உலகத்தின் மிகப்பெரிய தேவாலயமாகத் திகழ்ந்தது. கி.பி 1453- ம் ஆண்டு ரோமானிய பேரரசுக்கும் துருக்கி உருவாகக் காரணமாக இருந்த ஒட்டமான் இஸ்லாமிய பேரரசுக்கு நடந்த போரில் ரோமனியர்கள் தோல்வியடைந்தனர். இதனால், இஸ்தான்புல் ஒட்டமான் பேரரசுக்கு சொந்தமானது. இந்த தேவாலயமும் மசூதியாக மாற்றப்பட்டது. 1935- ம் ஆண்டு துருக்கி மதசார்பற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. அதன் அடையாளமாக தேவாலயமாக இருந்து மசூதியாக மாற்றப்பட்ட ஹாகியா சோபியாவை அருங்காட்சியமாக மாற்றியது. அதன் பிறகு, இங்கு தொழுகைகள் நடத்தப்படவில்லை .
இந்த நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் ஹாகியா சோபியா அருங்காட்சியம் மீண்டும் மசூதியாக மாற்றப்படும் என்று அறிவித்தார். இந்த செயலுக்கு கிரேக்க நாடான கிரீஸ் கடும் கண்டனம் தெரிவித்தது . ஆனால், அதையெல்லாம் சட்டை செய்யாத எர்டோகன், ஹாகியா சோபியவில் திட்மிட்டப்படி ஜூலை 24 - ந் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்படும் என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டார் . திட்டமிட்டப்படி தொழுகையும் நடைபெற்றது. 85 ஆண்டுகளுக்கு பிறகு ஹாகியா சோபியாவில் நடந்த தொழுகையில் 1000 பேர் கலந்து கொண்டனர்.
துருக்கி அதிபர் எர்டோகனும் தொழுகையில் பங்கேற்றார். தொழுகையின் போது பேசிய எர்டோகன், துருக்கிக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் பகையாகவே அந்த நாடு செயல்பட்டு கொண்டிருப்பதாக கிரீஸ் நாட்டின் பெயரை குறிப்பிடாமல் பேசியிருந்தார். இதைக் கண்டித்து கிரீஸ் நாட்டில் நடந்த போராட்டத்தில் துருக்கியின் தேசிய கொடிகள் எரிக்கப்பட்டன. துருக்கி அதிபரின் செயலுக்கு கிரீஸ் நாட்டு பிரதமர் கிரியாக்கோஸ் மிட்சோடாகிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
''துருக்கி நாடு எப்போதுமே பிரச்னைக்குரியதாகவே இருக்கிறது. அந்த நாட்டு அதிபர் எர்டோகனின் செயல் 21- ம் நூற்றாண்டு மனித நாகரீகத்துக்கு எதிரானது '' கிரீஸ் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹாகியா சோபியா விவகாரத்தை துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகள் அரசியலாக்காமல் இரு நாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பு.