இலங்கையிலிருந்து தப்பி தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கையின் பிரபல நிழல் உலக தாதா அங்கொட லொக்கா விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை இலங்கைப் போலீஸ் மறுத்துள்ளது. தாதாவே தன்னை போலீஸ் தேடுவதைத் தவிர்க்க திட்டமிட்டு இது போன்ற தகவலை கசியவிட்டிருக்கலாம் என்று இலங்கை போலீஸ் சந்தேகிக்கிறது.
இலங்கையின் நிழல் உலக தாதா, அங்கொட லொக்கா என்று அழைக்கப்படும் லசந்த சந்தன பெரோரா. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன். கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன் இவன். சிங்கள மக்கள் நிறைந்த பகுதியில் இவனுக்குத் தெரியாமல் எந்தவித குற்றச் சம்பவங்களும் நடைபெறாது. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட எந்த துறையாக இருந்தாலும் கொடுக்கல் - வாங்கல் டீலிங் நடந்தால் இவனுக்கு ஒரு ’கட்டிங்’ சென்றுவிடும்!
ஆனால், போலீஸார் பிடிக்க முயன்றாலும் அங்கோட லொக்காவை பிடிக்க முடியவில்லை. தலைமறைவாக இருந்து, தனது காரியத்தைச் சாதித்து வந்தான். வாய்ப்பு கிடைத்தால் இவனை தீர்த்துக்கட்ட எதிரிகளும் தேடி வந்தனர். இதற்கிடையே, 2017 - ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவம் இலங்கை முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையின் மற்றொரு நிழல் உலக தாதாவான அருணா தாமித் என்பவன் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திலும் அங்கோட லொக்காவுக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்பட்டது.
இதையடுத்து , இலங்கைப் போலீஸ் அங்கொட லொக்காவை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். ஆனால், அங்கொட லொக்கா கள்ளத்தோணியில் இந்தியாவுக்குத் தப்பி விட்டான். 2017 - ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகப் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டான். அதன்பிறகு , அங்கொட லொக்கா தலைமறைவாகிவிட்டான். பெங்களூரில் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில் இலங்கையில் அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் இருவர் போலிசாரிடம் சிக்கினர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஜூலை 3 - ம் தேதியே அங்கொட லொக்கா விஷம் வைத்துக் கொல்லப்பட்டாதாகத் தெரிவித்துள்ளனர்.
அங்கொட லொக்கா இறந்த செய்தி இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இலங்கை போலீஸார் இந்த தகவலை நம்பவில்லை.
இலங்கைப் போலீஸ் துறையின் செய்தி தொடர்பாளர் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறுகையில், ”அங்கொட லொக்கா இறப்பு தொடர்பாக இதுவரை எங்களுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை. இதற்கு முன்னரே இறந்துவிட்டதாக நாடகமாடியுள்ளான். இறந்துவிட்டதாகச் செய்தியைப் பரப்பி, வேறு பெயருடன் வேறொருவர் அடையாளத்துடன் இலங்கைக்குள் ஊடுருவிக் குற்றச் செயல்களைச் செய்ய திட்டமிடலாம். போலியான தகவல்களைப் பரப்பி வெளிநாடுகளில் பதுங்கிக்கொள்ளக் கூட வாய்ப்பு இருக்கிறது. அறிவியல் ரீதியாக இந்த தகவலை விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.