இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் ஹிட்லரின் 'நாஜி வதை கூடத்தில் 5232 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 93 - வயது முதியவரை குற்றவாளியாக அறிவித்துள்ளது, ஜெர்மனி நீதிமன்றம்.
ஜெர்மனியில், ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் ராணுவக் கைதிகளை அடைத்து வைக்க பிரத்யேக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. சித்ரவதைக் கூடங்களாகச் செயல்பட்ட இந்த சிறைக்கூடங்கள் ’நாஜி கான்சன்ட்ரேசன் கேம்ப்’ என்று அழைக்கப்பட்டது. இந்த வதைக் கூடத்தில் ’ஸ்டட்த் ஆஃப் கேம்ப்’ என்பது முக்கியமானது. கடந்த 1939 -ம் ஆண்டிலிருந்து 1945- ம் ஆண்டு வரை செயல்பட்ட இந்த வதைக் கூடத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 60,000 பேருக்கும் மேல் சித்ரவதை செய்து கொல்லப்பட்டனர்.
இந்தக் வதை கூடத்தில் புரூனோ டே என்கிற இளைஞரும் வேலை செய்தார். அப்போது புருனோ டேவுக்கு வயது 17 வயதே ஆகியிருந்தது. 1944 - 1945 ம் ஆண்டுகளில் மட்டும் இந்த முகாமில் 5232 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டதில் புரூனோ டேவுக்கு தொடர்பு இருந்தது. போரில் சோவியத் யூனியனால் ஹிட்லரின் படைகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஸ்டட்த் ஆஃப் கேம்பில் இருந்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். புரூனோ டேவும் கைது செய்யப்பட்டார். 5232 பேர் கொல்லப்பட்ட வழக்கு ஹம்பர்க் நகர நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதிக்கட்ட விசாரணை முடிந்து புரூனோ டே குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரசுத்தரப்பு வழக்கறிஞர் புரூனோ டேவுக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில் புரூனோ டேவின் முதுமையை கருத்தில் கொண்டு தண்டனை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது, 93 வயதாகும் புரூனோ டே, முதுமை காரணமாக நீதிமன்றத்துக்கு வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். நீதிபதி குற்றத்தை உறுதி செய்ததை கேட்டதும் கண் கலங்கிய புரூனோ டே, “நாஜி முகாம்களில் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காக நான் இன்று மன்னிப்பைக் கோருகிறேன். அதுபோன்ற கொடுமைகள் இனி யாருக்கும் நடக்கக்கூடாது. அப்போது நடந்த திகில் நிகழ்வுகளும், துன்பக் காட்சிகளும் என்னை என் வாழ்நாள் முழுவதும் துன்புறுத்தி வருகிறது” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
ஜெர்மனியில், நாஜி வதைக் கூடங்கள் தொடர்பாக மேலும் 12 வழக்குகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.