அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதன் மூலம் மாதம் 15 ஆயிரத்து 680 கோடி ரூபாய் ஆதாயமடைய உள்ளார்.
மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலகின் அதிகச் சந்தை மூலதனம் கொண்ட மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது.
இந்த நிறுவனத்தின் 6 மாத சராசரி சந்தை மூலதனம் 15 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. டெஸ்லா தலைவர் தனியாக ஊதியம் எதையும் பெறவில்லை. அதற்குப் பதிலாக 6 மாத சராசரி சந்தை மூலதனம், லாபம் ஆகியவற்றில் குறிப்பிட்ட இலக்கை எட்டும்போது நிறுவனப் பங்குகளை குறைந்த விலைக்கு எலோன் மஸ்க் வாங்கிக்கொள்ள அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இதனால் ஒரு பங்கு 350 டாலர் என்கிற விலையில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் பங்குகளை அவர் வாங்கிக் கொள்ளலாம். டெஸ்லா நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு ஆயிரத்து 594 டாலர் ஆகும்.
பங்குகளை நாலில் ஒருபங்குக்கும் குறைவான விலைக்கு வாங்கிக் கொள்ள எலோன் மஸ்க்குக்குக் கிடைத்துள்ள சலுகையால் அவருக்கு 210 கோடி டாலர் ஆதாயம் கிடைக்கும். இது இந்திய மதிப்பில் 15 ஆயிரத்து 680 கோடி ரூபாய் ஆகும்.