ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார், அமேசான்.காம் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ். 2012 ம் ஆண்டுக்குப் பிறகு, தனிநபர் ஒருவர் ஒரே நாளில் அதிகபட்சமாக சேர்த்த சொத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. 13 பில்லியன் அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.9,703 கோடி ஆகும்.
கொரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழல் அதிகமாகியுள்ளது. இதனால், அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகமாகியுள்ளது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங்கில் கோலோச்சிவரும் அமேசான் நிறுவனத்தின் சொத்துமதிப்பு திடீரென்று உயர்ந்தது. அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.
56 வயதாகும் ஜெஃப் பெசோஸ்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர். உலக அளவில் அதிகரிக்கும் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தால், இந்த ஆண்டில் மட்டும் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 73 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 74 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு தற்போது 189.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
அதோடு, ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியான மேகனீஸின் சொத்துமதிப்பு 4.6 பில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் உலகின் 13 - வது பணக்காரராக உள்ளார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவின் பொருளாதாரமே சரிந்துவரும் நிலையில், அமேசான் நிறுவனத்தின் சொத்து மதிப்போ ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது!