ஆக்ஸ்போர்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள கொரொனா தடுப்பூசி , கொரோனா வைரசுக்கு எதிரான இரட்டை பாதுகாப்பை அளிக்கும் என மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரிட்டன் அரசு நிதியுதவியுடன், ஆஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம், இந்த தடுப்பூசியை தயாரிக்க உள்ளது. இந்த தடுப்பூசியை வைத்து நடத்தப்பட்ட முதல் கட்ட மனித சோதனையில், உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடீஸ் உற்பத்தியாவதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியமான T செல்களும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தடுப்பூசி வரும் செப்டம்பர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சுமார் 200 கோடி தடுப்பூசிகளை உலகெங்கிலும் விநியோகிக்க ஆஸ்ட்ராஜெனேகா நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த நிலையில், லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகளின் கொரோனா தடுப்பூசி சோதனைக்கு, பிரிட்டன் அரசு சுமார் 360 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது.