அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் சீனா நாட்டின் ஹூவாய் நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த பன்னாட்டு தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் உலகம் தகவல் தொழில்நுட்ப சேவையை குறைந்த செலவில் வழங்கி வருகிறது. 5ஜி தொழில் நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது.
'ஹூவாய் நிறுவனம் அமெரிக்கா உள்ளிட்ட பயனாளர்களின் தகவல்களைத் திருடி சீனாவுக்கு வழங்குகிறது. இதனால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது' என்று கூறி ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவும் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளைத் தடை செய்தது. இந்த நிலையில், இங்கிலாந்தில் 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்கிவந்த ஹூவாய் நிறுவனத்தைத் தடை செய்துள்ளது இங்கிலாந்து அரசு.
இதுகுறித்து இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இங்கிலாந்தில் 5ஜி சேவையை வழங்கிவரும் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தைத் தடை விதிக்கிறோம். மேலும், 2027 - ம் ஆண்டுக்குள் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தையும் இங்கிலாந்திருந்து முழுவதுமாக அகற்றப்படும். இந்த ஆண்டு டிசம்பருக்குப் பிறகு ஹூவாய் நிறுவனத்திடமிருந்து புதிதாக 5ஜி தொழில்நுட்ப சாதனங்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது" என்று கூறி உள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடந்த இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.