தென் சீன கடலை தனது கடலாதிக்க சாம்ராஜ்யமாக சீனா கருதுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தென் சீன கடற்வழி போக்குவரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ற தலைப்பில் வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடலில் தென்கிழக்கு ஆசிய நட்பு நாடுகளுக்கு உள்ள உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா துணையாக இருக்கும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தென் சீனக் கடலில் உள்ள பெட்ரோலிய வளங்களை தனக்கு சொந்தமானது என சீனா கூறுவது சட்டவிரோதமானது என்று அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, எந்த நாடுமே சட்டப்படி உரிமை கோர முடியாத இடங்களை தனக்கு சொந்தமானது என கூறுவதை சீனா வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தென்சீன கடல் குறித்த தனது கொள்கையில் இருந்து மாற்றமான இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ள அமெரிக்கா, அந்த பிரதேசத்தில் உள்ள நாடுகள், பிரச்சனையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.