‘கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட அதிக நிதி தேவைப்படுகிறது. அதனால், எங்களைப் போன்றோருக்கு அதிக வரி விதித்து நிதி திரட்டுங்கள்" என்று பல்வேறு நாட்டு அரசுகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்கள் 80 உலக கோடீஸ்வரர்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒன்று சேர்ந்து, 'லட்சாதிபதிகளின் மனித நேயம்' என்று திறந்த மடல் ஒன்றை அனைத்து நாடுகளுக்கும் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், 'உடனே எங்களுக்கு அதிக வரி விதித்து சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துங்கள்' என்று கூறி உள்ளனர். இந்தக் கடிதத்தில் அபிகெய்ல் டிஸ்னி மற்றும் டிம் டிஸ்னி, ஜெர்ரி கிரீன்பீல்டு, மேரி போர்டு உள்ளிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், இதில் ஒரு இந்தியர் கூட கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தக் கடிதத்தில், "கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதில்லை. நாங்கள் ஆம்புலன்ஸையும் ஒட்டுவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவுப் பொருள்களையும் வழங்குவதில்லை. ஆனால், எங்களிடம் ஏராளமான அளவுக்குப் பணம் இருக்கிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. வியாபாரம் இல்லாததால் கோடிக்கணக்கான மக்களின் வேலை பறிபோய் உள்ளது. உலகம் முழுவதும் நூறு கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் ஐம்பது கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் தள்ளி உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். சுகாதார கட்டமைப்பில் அதிக முதலீடும் தேவைப்படுகிறது.
இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு கடன்பட்டுள்ளோம். ஆனால், அவர்களுக்கு மிகக்குறைந்த அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
வலிமையுள்ளவர்கள் தான் சுமையைத் தாங்கவேண்டும். அதனால், எங்களுக்கு அதிக வரி விதிப்பை மேற்கொள்ளுங்கள், இது மட்டுமே தீர்வு. பணத்தை விடவும் மனித நேயம் தான் முக்கியம்" என்று உள்ளது.
இந்தக் கடிதத்தை இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகின்றன. உலகக் கோடீஸ்வரர்கள் எழுதியிருக்கும் இந்தக் கடிதம் அனைவரையும் நெகிழச் செய்வதாக உள்ளது!