இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதால், டிக்டாக் நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை சீனாவிலிருந்து இடம் மாற்ற ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்த நிலையில், பாதுகாப்பு குறைபாடு எனக் கூறி அமெரிக்காவும் டிக்டாக்கை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் டிக்டாக் செயலியின் உரிமையாளரான ByteDance நிறுவனம், சீனாவுடனான தனது தொடர்பை துண்டிக்க திட்டமிட்டுள்ளது.
பீஜிங்கில் தலைமை அலுவலகத்தை கொண்ட அந்நிறுவனத்துக்கு, சீனாவுக்கு வெளியே லண்டன், லாஸ் ஏஞ்சலெஸ், நியூயார்க், மும்பை, டப்லின் ஆகிய நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில் தடை செய்யப்படுவதிலிருந்து தற்காத்து கொள்வதற்காக சீனாவிலிருந்து வெளியேறி இந்த 5 நகரங்களில் ஏதேனும் ஒன்றில் ByteDance நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை நிறுவுவதற்கு ஆலோசித்து வருகிறது.