ஹாங்காங்கில் தகுதியுள்ளவர்களுக்கு பிரிட்டனுக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்படும் என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் போராட்டம் நடத்துவோரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கும் வகையில் புதிய சட்டத்தை நிறைவேற்றிய சீனா அதைச் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயல் என்றும், ஹாங்காங் குடிமக்களின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள நேரடி அச்சுறுத்தல் என்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.
1997ஆம் ஆண்டு சீனா - பிரிட்டன் நாடுகளின் கூட்டுத் தீர்மானத்தின்படி ஹாங்காங்கில் ஐம்பது ஆண்டுகளுக்குத் தன்னாட்சி தொடர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஹாங்காங்கில் வெளிநாடுவாழ் பிரிட்டிஷ் மக்களுக்கான பாஸ்போர்ட் வைத்துள்ளோரும், அவர்களைச் சார்ந்தவர்களும் பிரிட்டனுக்கு வர அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்தார்.