அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் ஜாதி அடிப்படையில் ஊழியர் ஒருவர் மீது பாகுபாடு காட்டி துன்புறுத்தியதாக மேலாளர்கள் இருவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா, சான் ஜோஸில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்டவர் 2015 ம் ஆண்டு அக்டோபரிலிருந்து கலிபோர்னியா, சான் ஜோஸில் அமைந்துள்ள சிஸ்கோ தலைமையகத்தில் முதன்மைப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவர் இந்தியாவில் பட்டியலினத்தைச் பிரிவைச் சேர்ந்தவர். இதே சிஸ்கோ நிறுவனத்தில் பொறியியல் மேலாளராகச் சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் ஜாதி ரீதியாக பட்டியலின ஊழியரை மனரீதியாக துன்புறுத்தியதாக கூறி இருவர் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து சிஸ்கோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராபின் பிளம், "இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். சட்டத்தின்படி, பணியிடங்களில் அனைவரும் சரிசமமாகவே நடத்தப்படுகிறார்கள். அனைத்து சட்டங்கள் மற்றும் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு முழுமையாக இணங்கியே செயல்படுகிறோம்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா சிலிக்கன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பிராமணர்கள் உள்ளிட்ட உயர் ஜாதி மக்கள் தான் அதிகமானோர் உள்ளனர். இவர்கள் இந்தியாவில் கடைப்பிடித்த அதே 'தீண்டாமை' கொள்கையை அமெரிக்காவிலும் கடைப்பிடிப்பதாகப் பல காலமாகவே குற்றச்சாட்டு உள்ளது. அமெரிக்காவின் மக்கள் உரிமைகள் குழு 2018 ம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கப் பணியிடங்களில் 67 % பட்டியலின ஊழியர்கள் ஜாதிய ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளது.